×

பட்டிவீரன்பட்டி அருகே கைது செய்யப்பட்ட போலி ‘போலீஸ் கமிஷனருக்கு’ உயர் அதிகாரிகளுடன் தொடர்பு?

* ஐஏஎஸ், ஐபிஎஸ்   அதிகாரிகளுடன்   போட்டோக்கள் சிக்கின
* விசாரணையில் ‘திடுக்’தகவல்கள் அம்பலம்


பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகே கைதான போலி போலீஸ் கமிஷனர் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே லட்சுமிபுரம் டோல்கேட்டில் போலி போலீஸ் கமிஷனராக வலம் வந்த சென்னை கொளத்தூர் ஜீவா நகரை சேர்ந்த விஜயன் (42) என்பவரை 2 நாட்களுக்கு முன்பு பட்டிவீரன்பட்டி போலீசார் கைது செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது:விஜயன் நடத்தி வந்த லாரி தொழிலில் நஷ்டம் ஆனதால், வேறு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் மனைவிக்கும், விஜயனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவியை சமாளிக்க குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று, டிஎஸ்பி ஆனதாகவும், தற்போது போலீஸ் கமிஷனராக உள்ளதாகவும் கூறியுள்ளார். இதனை நம்ப வைப்பதற்காக கோவையை சேர்ந்த குடும்ப நண்பர் ஜெயமீனாட்சி உதவியுடன் ஜீப் வாங்கி, அதை போலீஸ் வாகனம் போல மாற்றி வலம் வந்துள்ளார். ஜீப்பை எடுத்து கொண்டு அடிக்கடி விசாரணைக்காக செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு வெளியூர் சென்று விடுவார். சந்திப்பவர்களிடம் எல்லாம் தன்னை கமிஷனர் எனக் கூறி பண மோசடி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது போலீசாரிடம் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் கைதான விஜயன் இருக்கும் புகைப்படங்கள் சிக்கியுள்ளன. மேலும், சில போலீஸ் உயரதிகாரிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. கேரள முதல்வர் பினராய் விஜயன், புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆகியோருடனும் இவர் புகைப்படம் எடுத்துள்ளார். இதுகுறித்து அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.சிக்கியது எப்படி? விஜயன் போலீசாரிடம் பிடிபடுவதற்கு முதல் நாள் கேரள மாநிலம் குமுளி சென்றுள்ளார். அங்குள்ள போலீஸ் சோதனைச்சாவடியில் தன்னை போலீஸ் கமிஷனர் என அறிமுகப்படுத்திக் கொண்டு, ஐடி கார்டு காட்டி கேரள மாநிலத்திற்குள் சென்றுள்ளார். அங்குள்ள கட்டப்பனை காவல்நிலையத்திற்கு சென்று, அங்கு பணியில் இருந்த டிஎஸ்பி நிஷாத்திடம் பல மணிநேரம் பேசிவிட்டு வெளியில் வந்துள்ளார். பின்னர் போலீஸ் நிலையத்தை புகைப்படம் எடுத்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த கட்டப்பனை போலீசார், இவரை புகைப்படம் எடுத்துள்ளனர்.

அந்த புகைப்படம் மற்றும் அவர் கையில் வைத்திருந்த ஐடி கார்டை தமிழக போலீசாருக்கு அனுப்பி விசாரித்ததில், ‘‘விஜயன் என்ற பெயரில் போலீஸ் கமிஷனர் இல்லை’’ எனக் கூறி உள்ளனர். இந்த தகவல் கேரள போலீசாருக்கு கிடைப்பதற்குள், விஜயன் தமிழ்நாட்டிற்குள் வந்து விட்டார். இதனால் உஷாரான தமிழக போலீசார், இதுகுறித்து திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்பேரில் விஜயனை பட்டிவீரன்பட்டி அருகே லட்சுமிபுரம் டோல்கேட்டில் நடந்த வாகனச் சோதனையில் நெடுஞ்சாலை போலீசார் பிடித்துள்ளனர்.



Tags : Pattiviranapatti , Arrested near Pattiviranapatti Fake 'Police Commissioner' Contact with top officials?
× RELATED பள்ளி கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்;...